ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு 15 கோரிக்கைகள் கொண்ட மனுவை பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பிய FAIRA கூட்டமைப்பு தலைவர் ஹென்றி


தாங்கள் கடந்த 12/05/2020 அன்று மாலை காட்சி ஊடகம் வாயிலாக தோன்றி நாட்டு மக்களிடையே உரையாற்றிய போது சுயசார்பு துறையை மேம்படுத்தும் வகையில் 20 லட்சம் கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்தும், அதுகுறித்து நிதித்துறை மந்திரி அவர்கள் அறிவிப்பார்கள் என்றும் தெரிவித்தீர்கள். இந்த அறிவிப்பு குறித்த செய்தியை பார்த்த நான் உட்பட மக்களெல்லாம் உள்ளபடியே மகிழ்ச்சி அடைந்தோம். அதன்படி கடந்த மே 13-ம் தேதி முதல் நான்கு கட்டங்களாக நிதி மந்திரி அவர்கள் 20 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதி திட்டங்களை அறிவித்தார். அந்த திட்டங்களை பார்த்து உள்ளபடியே நான் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த மனவேதனை அடைந்தோம். நம் பாரத தேசத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வெகுமக்களுக்கு (25% சதவிகிதம் பேருக்கு) வேலை வாய்ப்புகளையும், அரசுக்கு வருவாயையும் ஏற்படுத்தி தரும் மிகப்பெரிய துறை கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை. இப்படிப்பட்ட ரியல் எஸ்டேட் துறைக்கு மைய அரசு அறிவித்த நிதி உதவி திட்டத்தில் எந்தவிதமான சலுகையும், விலக்கும் அளிக்காதது மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது. முன்கூட்டியே செலுத்தும் வருமானத்தின் மீதான வரி பிடித்தம் (டிடிஎஸ்) 25% சதவிகிதம் குறைப்பு தவிர வேறொன்றுமில்லை. வருமான வரி செலுத்த நவம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. அரசு கட்டுமான பணியை மேற்கொள்ள பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அவர்களின் பதிவு காலத்தை அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளனர். இதுதவிர முடங்கிக் கிடக்கும் ரியல் எஸ்டேட் துறை புத்துணர்ச்சி பெற்று, மீண்டும் எழுச்சிபெற நாங்கள் எதிர்பார்த்த எந்த திட்டமும் இந்த அறிவிப்பில் இடம் பெறவில்லை. ஆகவே கீழ்கண்ட திட்டங்களை வரும் 2020-2021 & 2021-2022 ஆகிய இரண்டு நிதி ஆண்டிற்கு மட்டுமாவது (குறைந்தபட்சம்) பொதுமக்களின் நலன் கருதியும், நாட்டின் நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையிலும் அரசு நடைமுறை படுத்த வேண்டுகிறோம். 1)வருமான வரியில் (Income Tax waiver) விலக்கோ அல்லது சலுகையோ வழங்கிட வேண்டுகிறோம், 2)கட்டுமான பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியும், வீடு வாங்கும் பொதுமக்களுக்கு விதிக்கும் (GST) வரியும் குறைத்திட வேண்டுகிறோம். 3)புதிதாக வீடுகளை வாங்குகின்றவர்களுக்கு வங்கி வட்டியை வெகுவாக குறைத்து வழங்கிட வேண்டுகிறோம். 4)ஏற்கனவே வங்கியில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஆறு மாதத்திற்கு வங்கி கடனுக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டுகிறோம். 5)இரண்டாம் மற்றும் மூன்றாம் வீடுகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிக்கு செலுத்தும் வட்டிக்கு வருமான வரியில் சலுகை வழங்கிட வேண்டுகிறோம். 6)ஏற்கனவே கட்டுமான பணியை துவங்கி, முடிவுறாமல் இருக்கும் கட்டுமான திட்டங்களுக்கு வட்டியில்லாமலோ அல்லது குறைந்த வட்டியிலோ மேற்கண்ட கட்டுமான பணியை நிறைவு செய்ய, மூன்றாம் நபர் பிணை இல்லாமல், கிடுக்கிப்பிடி சட்டங்கள் ஏதுமின்றி நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் வங்கி கடனை வழங்கிட வேண்டுகிறோம். 7)ரியல் எஸ்டேட் துறையில் (FDI) வெளிநாட்டு நேரடி முதலீடுகளை முதலீடு செய்யும் வகையில், விரைவாக அதற்கான அனுமதி வழங்கிட வேண்டுகிறோம். 8)கட்டுனர்களின் புதிய திட்டத்துக்கு வங்கி கடன் வழங்கும் திட்டத்தை (Project Funding) கொண்டு வந்து, அதன் மூலம் விரைவாக நடைமுறைபடுத்திட வேண்டுகிறோம். 9)புதிதாக ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் முதலீட்டுத் தொகைக்கு (Capital Investment) நூறு சதவிகிதம் தேய்மானத்திற்கான (depreciation incomtax waiver) வருமானவரி விலக்களித்திட வேண்டுகிறோம். 10)பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் வழங்கும் மானிய தொகையை உயர்த்தி வழங்கும் திட்டமும், வங்கி மற்றும் தனியார் கடன் பெற்றும் கையில் இருந்து பணம் போட்டும் வீடு கட்டும் அல்லது வாங்கும் பயனாளிகளுக்கு (upfront) உடனடியாக அந்த தொகையை வழங்கிட வேண்டுகிறோம். 11)ரியல் எஸ்டேட் துறையை ஒரு தொழில் துறையாக (Industry) அங்கீகரித்திட வேண்டுகிறோம். 12)சாதாரண, சாமானிய மக்களும், கட்டுனர்களும் மேற்கொள்ளும் கட்டுமான பணிகளுக்கு கட்டுமான பொருட்களை மானிய விலையில் வழங்கிட வேண்டுகிறோம். 13)கட்டுமான பொருட்களின் விலை குறைய, சுங்கச் சாவடி கட்டணத்தை குறைத்தும், எரிபொருள் வரியை குறைத்தும் நடைமுறைப்படுத்திட வேண்டுகிறோம். 14) ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் முதலீட்டு தொகையில் 25 சதவிகிதம் வரை வருமான வரி விதிக்காமல் (Stamp duty and registration fees முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம், GST சரக்கு மற்றும் சேவை வரி, TDS வருமானத்தின் மீதான வரி பிடித்தம் உட்பட) பண பரிவர்த்தனையை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டுகிறோம். 15) அரசு துறை மற்றும் சார்பு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு, பொருட்களை உற்பத்தி செய்து வினியோகம் செய்த வகையில், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அரசு வழங்க வேண்டிய 3 லட்சம் கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டுகிறோம். மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தயவுகூர்ந்து மேற்கண்ட எங்கள் கூட்டமைப்பின் கோரிக்கைகளை மக்கள் நலன் கருதியும், நாட்டின் நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையிலும், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையை மீட்டெடுக்கும் வகையிலும், மேற்கண்ட எங்கள் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து, விரைவாக நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என மேற்கண்ட கூட்டமைப்பின் சார்பாக பணிவோடு தங்களுக்கு கோரிக்கையாக வைக்கின்றேன்.