ரியல் எஸ்டேட் துறையை முன்னேற்ற பாதையில் கொண்டு வர முத்தரப்பு குழுவை தமிழக அரசு உருவாக்க FAIRA கூட்டமைப்பு தலைவர் ஹென்றி முதல்வருக்கு கோரிக்கை


ஊரடங்கு உத்தரவு முடிவிற்குப் பிறகுதான், முடங்கி கிடக்கும் ரியல் எஸ்டேட் துறையை பொதுமக்களின் நலன் கருதி மறுசீரமைத்து, மீட்டெடுக்கும் வகையில் கீழ்கண்ட கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கனிவோடு பரிசீலனை செய்து, போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றி தருமாறு தங்களை வேண்டுகிறோம். *1)தமிழக பத்திரப் பதிவுத் துறையில் குறைந்தபட்சம் 2020-2021மற்றும் 2021-2022 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கு மட்டுமாவது முத்திரைத்தாள் கட்டணத்தை நான்கு சதவீதமாகவும், பதிவு கட்டணத்தை ஒரு சதவீதமாகவும் நிர்ணயித்து, உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டுகிறோம்.* அரசு நிலங்களின் மீதான வழிகாட்டி மதிப்பில் உள்ள குளறுபடிகளை துணைக் குழுக்களை அமைத்து, நேரில் பார்வையிட்டு சரி செய்தும், பதிவு செய்ய வரும் நபர்களின் தகவல்களை (CCTV Footage) கண்காணிப்பு கேமரா காட்சியை பதிவு செய்து குறுந்தகடாக வழங்குவதற்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் 100 ரூபாயை ரத்து செய்தும், பதிவு செய்யும் நேரத்தை மாலை 3.30 மணியிலிருந்து உயரத்தி மாலை 5.30 மணி வரை நீட்டித்தும், பதிவுத்துறையை மையப்படுத்தி, (centralisation) தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்களில் எங்கும் பதிவு செய்யும் வகையில் வழிவகை செய்தும், ஆவணப் பதிவில் உள்ள கிடுக்குப்பிடி மற்றும் சிக்கல்கள் நிறைந்த சட்டங்களை, நடைமுறைகளை மாற்றியமைத்து எளிமைப்படுத்தியும், சொத்தின் மீது பொது அதிகாரம் பெற்ற முகவர்கள் (General Power of Attorney) பதிவை உறுதி செய்து நிறைவேற்றும் வகையில், தன் கடமைகளை நிறைவு செய்து, பதிவு அலுவலகத்தில் மட்டும் தனக்காக தாக்கல் செய்யும் வகையில் (Presentation Power) அதிகார முகவரை நியமிக்கும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்தி உறுதி செய்தும், உயில் எழுதுபவர்களின் விவரம் உள்ளிட்ட ரகசியம் காத்து, அவர்களின் உயிரை பாதுகாக்கும் வகையில், தற்போதுள்ள சட்ட நடைமுறையை மாற்றியமைத்தும், பதிவு அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து பதிவு பணியை நடைமுறைப்படுத்த இயலாதவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கு சென்று பதிவு செய்யும் தனியார் வருகை (Private Attendance) நடைமுறையை உறுதி செய்தும், அவசர பதிவு நிமித்தம் விடுமுறை காலங்களில் நடைபெறும் சிறப்பு பதிவு (Special Registration) நடைமுறையை உறுதி செய்தும், தற்போது பதிவுத்துறை அலுவலகத்தின் வாயிலாகவே பட்டா உள்ளிட்ட வருவாய்த்துறை பதிவேடுகளை மாற்றம் செய்யும் பணி நடைபெறுவதை உறுதிசெய்து, விரைவாக பணியை மேற்கொள்ள வேண்டும். நில முகவர்கள் மற்றும் பத்திர எழுத்தர்கள் உள்ளிட்ட சார்பு தொழிலாளர்களை அங்கீகரித்து, பதிவு செய்யும் பத்திரம் ஒன்றிற்கு ரூபாய் 100 என்ற அளவுக்கு தொழிலாளர் நிதியை நிர்ணயித்து, அவர்களுக்கான வாரியத்தை ஏற்படுத்தி விரைவாக நடைமுறைப்படுத்திட வேண்டுகிறோம். *2)அங்கீகாரமில்லாத பட்டா வீட்டுமனைகளை, வரன்முறை சட்டம்-2017, அரசாணை நிலை எண் 78 மற்றும் 172 இன் கீழ் அங்கீகாரம் பெறும் வகையில், அரசு கொண்டுவந்த சிறப்பு திட்டம் கடந்த 03/11/2018 அன்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் இந்த சிறப்பு திட்டத்தை பயன்படுத்தி அங்கீகாரம் பெற விண்ணப்பிக்காத பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, அரசு இந்த வரன்முறை சட்டத்தின் கால அவகாசத்தை நீட்டித்து தர வேண்டுகிறோம்.* *3)சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றில் ஏற்கனவே மனை மற்றும் கட்டிட திட்ட அனுமதி கோரி விண்ணப்பித்து, இன்னும் முடிவுறாமல் (தீர்வு ஏற்படாமல்) இருக்கும் விண்ணப்பங்களின் மீது, விரைவாக எதிர்வரும் 15 நாட்களுக்குள் அங்கீகாரம் வழங்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டுகிறோம்.* மேலும் மேற்கண்ட துறைகளில் காலதாமதமின்றி, 30 நாட்களுக்குள் அங்கீகாரம் பெறும் வகையில், அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து, ஒற்றைச்சாளர முறையை (Single Window System) விரைவாகக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்திட வேண்டுகிறோம். மேலும் மேற்கண்ட துறைகளின் துணை அதிகார அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் வரம்பை உயர்த்தி வழங்கவும் வேண்டுகிறோம். தற்பொழுது அரசு கட்டுமான திட்ட அனுமதியில் 2 மடங்கு வரை உயர்த்தியுள்ள தள பரப்பளவு (FSI) அங்கீகாரம் பெரும் வசதியை, சிறிய அளவில் கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் சாதாரண கட்டுனர்களுக்கும் பொருந்தும் வகையில் வழிவகை செய்து, அதற்கேற்ற வகையில் சட்ட விதிகளை மாற்றியமைக்க வேண்டுகிறோம். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் (RERA) பதிவு செய்யும் நடைமுறை, அதற்கான தனி விண்ணப்பம், கூராய்வு, அதற்கென தனி கட்டணங்கள், நிபந்தனைகள் அடிப்படையில் தனி வங்கி கணக்கு (Escrow Account) அதற்கான கால அவகாசம் போன்றவற்றை நீக்கி விலக்களித்தும், மனை மற்றும் கட்டிட திட்ட அனுமதி பெற தற்போது நடைமுறையில் உள்ள பலவகையான கட்டணங்களை ஒருங்கிணைத்து வெகுவாக குறைத்திடவும், கட்டுமான பணி நிறைவு சான்று (Completion Certificate) பெரும் நடைமுறை வரம்பை 50 அலகு (Unit) எண்ணிக்கை மற்றும் மூன்று தள அடுக்குமாடி என்ற அளவின் அடிப்படையில் விலக்கு அளிக்க வேண்டுகிறோம். புதிய வீடுகளுக்கு மும்முனை மின் இணைப்பு பெற, தற்பொழுது மின்சாரத்துறை உயர்த்தியுள்ள வைப்புத்தொகையை திரும்ப பெற்றும், மலைகள் பாதுகாப்பு அதிகார குழும எல்லைக்குட்பட்ட, வீட்டுமனைகளை வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கும் வகையில் அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, நீக்கி எளிமைப்படுத்தியும், அரசால் வீடு மற்றும் வணிக வளாகங்களுக்கு விதிக்கப்படும் வீட்டு வரி, கட்டிட வரி, குடிநீர் மற்றும் கழிவு நீர் வரியை அடுத்த பத்தாண்டுகளுக்கு வெகுவாக குறைத்தும், மனை மற்றும் கட்டிட திட்ட அனுமதி பெறும் போது திறந்த வெளி நிலம் (OSR) 10% சதவிகிதம் கொடுத்த பிறகும், மின் துறைக்கும், உள்ளூர் பஞ்சாயத்து வளர்ச்சிக்கும் மேலும் ஒரு சதவீதம் கூடுதலாக கொடுக்க வேண்டியுள்ளது இதனை ரத்து செய்ய வேண்டுகிறோம். ஏற்கெனவே வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ள வீட்டுமனை பிரிவின், பின்புறம் அமைந்துள்ள நிலங்களில் மனை மற்றும் கட்டிட திட்ட அனுமதி பெற, அணுகு சாலை குறித்த விதிகளில் மாற்றம் செய்து, தளர்வளித்து அங்கீகாரம் வழங்க வேண்டுகிறோம். போலி ஆவணங்கள் உருவாவதை தடுக்கும் வகையில், வருவாய் பதிவேடுகள், சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவு நீர் வரி, மின் இணைப்பு அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் உரிமையாளரின் புகைப்படத்தை இணைத்து அச்சிட்டு (ஆன்லைன் மூலமும்) வழங்க வேண்டும். *4)கடந்த கால் நூற்றாண்டு காலமாக மாற்றம் செய்யாமல் இருக்கும் நிலப்பயன்பாட்டு அட்டவணையை, தற்போதைய சூழ்நிலையில் நிலம் எந்த பயன்பாட்டு நிலையில் உள்ளது என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியரின் தலைமையில், துணைக் குழுவை நியமித்து நேரில் ஆய்வு செய்து, அதற்கேற்றபடி நில பயன்பாட்டு அட்டவணையை விரைவாக வகைபாடு செய்து மாற்றம் செய்ய வேண்டுகிறோம்.* மேலும் வளர்ச்சி அடைந்துள்ள நகர்புறங்களில் ஏற்கனவே உள்ள வீட்டுமனையிலிருந்து குறைந்தது 5 சதுர கிலோமீட்டர் வரைக்கும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கண்ட சுற்றளவில் அமைந்துள்ள நிலங்கள் வீட்டுமனை ஏற்படுத்த உகந்த நிலம் என நிலப்பயன்பாட்டு அட்டவணையில் மாற்றியமைத்தும் விரைவாக நடைமுறைப்படுத்திட வேண்டுகிறோம். *6)சாதாரண, சாமானிய மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு குறைந்த விலை வீடுகளைக் கட்டிவரும் கட்டுனர்களுக்கு கட்டுமான பொருட்களை மானிய விலையில் வழங்க அரசு முன்வர வேண்டும்.* குவாரிகள் மீதான அனுமதி மற்றும் நடைமுறையை எளிமைப்படுத்தி மணல் மற்றும் ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் கட்டுக்கடங்காத விலை வீக்கத்தை, கட்டுக்குள் கொண்டுவர போர்க்கால அடிப்படையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுநர்கள் மற்றும் வீட்டுமனை அபிவிருத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு தரப்பில் வீடு மற்றும் மனை குறித்த பொது கண்காட்சி நடத்திட வேண்டுகிறோம். *7)தமிழக அரசின் நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில், பதிவுத்துறை உள்ளிட்ட பொதுமக்கள் சேவை பெறும் அனைத்து துறைகளிலும் குறிப்பாக குறைவு முத்திரை தீர்வை, சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி போன்ற இனங்களுக்கு சமாதானத் திட்டத்தை கொண்டு வந்து, அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை பாதியாகக் குறைத்து உத்தரவு பிறப்பித்தால் அரசுக்கு பெரும் வருவாய் ஏற்படும். மேலும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த முடிவுகளை எடுக்கவும், ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுத்து செல்லவும், அரசு தரப்பில் "முத்தரப்பு குழு" ஒன்றை அமைத்து அவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுத்து நடைமுறைப்படுத்தினால் ரியல் எஸ்டேட் துறை வெகுவாக வளர்ச்சி பெரும். ஆகவே தமிழக அரசு மேற்கண்ட எங்கள் கூட்டமைப்பின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்து, விரைவாக நடைமுறைப்படுத்திட வேண்டுகிறோம்.